Monday, 5 September 2011

டி.ஆர்.எஸ்., சதியில் டிராவிட்! * கேப்டன் தோனி ஆவேசம்

செஸ்டர்-லி-ஸ்டிரீட்: இங்கிலாந்து தொடரில் அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையில் டிராவிட் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இவருக்கு எதிராக முதலாவது ஒரு நாள் போட்டியிலும் அநியாயமாக "அவுட்' கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் தோனி, சர்ச்சைக்குரிய டி.ஆர்.எஸ்., முறை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது. அடுத்து, 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. நேற்று முன் தினம் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இப்போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்து, டிராவிட்டை கடந்து விக்கெட் கீப்பர் கீஸ்வெட்டர் கையில் தஞ்சம் புகுந்தது. உடனே அவர் "அப்பீல்' செய்தார். களத்தில் இருந்த அம்பயர் டாக்ட்ரோவ் (வெ.இண்டீஸ்) மறுத்தார். இதையடுத்து டி.ஆர்.எஸ்., முறையில் இங்கிலாந்து வீரர்கள் "ரிவியு' கேட்டனர். "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல முறை "ரீப்ளே' மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், "டிவி' அம்பயர் மரைஸ் எராஸ்மஸ்(தென் ஆப்ரிக்கா) "அவுட்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
சந்தேகம் சாதகம்:பொதுவாக, "ரீப்ளே' தெளிவில்லாத நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தான் தீர்ப்பு வழங்கப்படும். டிராவிட் விஷயத்தில் எல்லாமே தலைகீழாக உள்ளது. இங்கிலாந்து தொடரில் இவருக்கு எதிராகவே டி.ஆர்.எஸ்., முறை அமைந்துள்ளது. உதாரணமாக மூன்றாவது டெஸ்டில் ஆண்டர்சன் பந்தில் வீணாக "அவுட்' கொடுக்கப்பட்டார். உண்மையில் பந்து இவரது "ஷூ லேசில்' தான் பட்டது. இதே போல நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் சுவான் வீசிய பந்து, டிராவிட்டின் கால் பேடில் பட்டுச் சென்றது. ஆனால், டி.ஆர்.எஸ்., முறையில் "டிவி' அம்பயர் ஸ்டீவ் டேவிஸ்(ஆஸி.,) தவறாக "அவுட்' கொடுத்தார். தற்போது மீண்டும் ஒரு முறை டி.ஆர்.எஸ்., சதியில் "இந்திய பெருஞ்சுவர்' டிராவிட் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது.
இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:டிராவிட் "அவுட்' தொடர்பாக நிறைய விஷயங்கள் ஆராயப்பட வேண்டும். "ஹாட் ஸ்பாட்' மூலம் ஆய்வு செய்ததில், பந்து பேட்டில் பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். "டிவி' அம்பயர் எந்த அடிப்படையில் "அவுட்' கொடுத்தார் என தெரியவில்லை.
ஒருவேளை "ஸ்னிக்கோமீட்டர்'(பேட்டில், பந்து படும் சத்தத்தை வைத்து கண்டுபிடிக்கும் கருவி) பயன்படுத்தினாரா? டி.ஆர்.எஸ்., தொழில்நுட்பத்தில் "ஸ்னிக்கோமீட்டர்' பயன்படுத்த முடியாது என்பது அவருக்கு தெரியாதா? "அவுட்' கொடுத்தது "ஆடியோ' தொழில்நுட்ப வல்லுனரா அல்லது "டிவி' அம்பயரா? "ரீப்ளே' தெளிவான முடிவை தராதபட்சத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக ஏன் தீர்ப்பு வழங்கவில்லை? இந்த தவறான தீர்ப்பு டி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் துல்லியமாக இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இதில், நிறைய குறைகள் உள்ளன.
வருகிறார் திவாரி:
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்குவது கவலை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின்(வலது கால் பெருவிரல் பகுதியில் வீக்கம்), ரோகித் சர்மாவும்(வலது கை சுட்டு விரலில் எலும்பு முறிவு) சேர்ந்துள்ளனர். ரோகித்திற்கு பதிலாக மனோஜ் திவாரி இடம் பெறுகிறார். சச்சின் காயம் தொடர்பாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற உள்ளார். இவர்களுக்கு பதிலாக புதிதாக வரும் வீரர்கள், இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப உடனடியாக பக்குவப்படுத்திக் கொள்வது மிகவும் கடினம். இருக்கும் வீரர்களை கொண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம். வரும் காலங்களில் குறைந்தது 18 வீரர்களுடன் பயணம் செய்ய வேண்டும்.
வெற்றி வாய்ப்பு:
முதலாவது ஒரு நாள் போட்டியில் பார்த்திவ் படேல் உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக "பேட்' செய்தனர். பவுலர்களும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர். மழை குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.
இவ்வாறு தோனி கூறினார். 

Wednesday, 31 August 2011

ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

இன்று ரம்ஜான் பண்டிகை. இதையொட்டி கடந்த 30 நாட்களாக நோன்பு நோற்று வந்த இஸ்லாமியர்கள் தங்களது புனிதக் கடமையை முடித்து விட்டு இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி காலையிலேயே பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

ரம்ஜானையொட்டி தமிழக ஆளுநராக இன்று பொறுப்பேற்கும் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிரடி வெற்றி பெறுமா இந்தியா? * இன்று இங்கிலாந்துடன் "டுவென்டி-20' மோதல்

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான "டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. பயிற்சி போட்டிகளில் அசத்திய இந்திய அணியின் இளம் வீரர்கள், இதில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி இன்று மான்செஸ்டர், ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இந்திய அணி, சமீபத்தில் நடந்த மூன்று பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக நம்பிக்கையுடன் உள்ளது. துவக்க வீரர் பார்த்திவ் படேல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இன்று சச்சினுடன் இணைந்து களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த மூன்று பயிற்சி போட்டியிலும் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா நம்பிக்கையுடன் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இதனால், இன்றும் அசத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
"மிடில் ஆர்டரில்' டிராவிட் வழக்கம் போல, "நங்கூர' ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பின்வரிசையில் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். இவர்கள் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது.
வினய் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிரவீண் குமார் நம்பிக்கை தருகின்றார். இவருடன் வினய் குமாரும் இணைந்து தாக்குதல் தொடுத்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் தரலாம். சுழலில் அஷ்வின், அமித் மிஸ்ரா என இருவரும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இதனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் இடம்பெறுவது கடினமே.
பிராட் கேப்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. "ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பிராட், "டுவென்டி-20' அணியின் கேப்டனாக <உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கீஸ்வெட்டருடன், அறிமுக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' பீட்டர்சன், மார்கன், ரவி போபரா, சமித் படேல், ஜாஸ் பட்லர், பென் ஸ்டிரோக்ஸ் ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
பவுலிங்கில் ஸ்டூவர்ட் பிராட்டுடன், பிரஸ்னன், டெர்ன்பக், ஸ்டீவன் பின் கைகொடுக்க காத்திருக்கின்றனர். சுழலில் சுவான் தொல்லை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பதிலடி கொடுக்குமா?
தற்போதைய "டுவென்டி-20' உலக சாம்பியன் இங்கிலாந்து அணி, சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் தோற்றுள்ளது. இதனால் இன்று உலக சாம்பியன் அந்தஸ்துக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கலாம். அதேநேரம் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இன்றைய போட்டியில் அதிக விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 30 August 2011

தோனிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

லீசெஸ்டெர்: இந்திய கேப்டன் தோனிக்கு டி மான்ட்போர்ட் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. டுவென்டி-20 பயிற்சி போட்டியின் முடிவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. திறமையான தலைமை மற்றும் சாதனைக்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக தோனிக்கு பாராட்டும் கிடைத்தது. இந்த பட்டம் பற்றி பேட்டியளித்த தோனி, இந்த பட்டத்தை பெறுவதன் மூலம் திக்குமுக்காடச்செய்கிறது. அதே நேரத்தில் பெருமையடைவதாகவும் உள்ளது. இந்த பட்டம் எனக்கு இந்திய அணி கேப்டனுக்காக வழங்கப்படுவதாக கருதவில்லை. ஒட்டு மொத்த அணிக்கும் வழங்கப்படுவதாக கூறினார்.

செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: வரும் செப்டம் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படத் தொடங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு 90 சேனல்கள் ரூ 70-க்கே கிடைக்கும் என்றும் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று 110-வது பிரிவின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், இதன் காரணமாக இந்த தொழிலில் ஏகபோக நிலையை ஏற்படுத்தியவர்கள் அதிக லாபம் பெற்று வருகின்றனர், என்பதையும், இந்த மாமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

முந்தைய அரசால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நிறுவனம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் டி.வி. நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்றைய நிலவரப்படி 432 இணைப்புகளாக சுருங்கி விட்டது.

திமுக அரசு முடக்கியது

அதாவது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. எனவேதான் அ.தி. மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கேபிள் டி.வி. தொழிலில் உள்ள ஏக போகத்தை தடுத்து அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கை களை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும எனது அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழு நேர தலைவர் மற்றும் இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த ஒரு நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும்

ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.

கட்டணச் சேனல்களும்

31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெறும் ரூ 70 மட்டுமே

விரைவில் கட்டணச் சேனல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் வழங்கப்படும். 2.9.2011 முதல் ஒளிபரப் புச்சேவைகள் தொடங்கப்பட்டு குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கும் என்பதையும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒளிபரப்பை வழங்கும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்பை தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு ஜெயலலிதா அறிவி்த்தார்.

யாருக்குப் பெருநாள்?

- பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ


உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை,
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை,
காலையில் எழுந்து டீ / காபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை,
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை,
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!

தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத் தான் பெருநாள்...!

வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறை கடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித் தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட

உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!

எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்!

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.