Wednesday, 31 August 2011

ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

இன்று ரம்ஜான் பண்டிகை. இதையொட்டி கடந்த 30 நாட்களாக நோன்பு நோற்று வந்த இஸ்லாமியர்கள் தங்களது புனிதக் கடமையை முடித்து விட்டு இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி காலையிலேயே பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

ரம்ஜானையொட்டி தமிழக ஆளுநராக இன்று பொறுப்பேற்கும் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிரடி வெற்றி பெறுமா இந்தியா? * இன்று இங்கிலாந்துடன் "டுவென்டி-20' மோதல்

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான "டுவென்டி-20' போட்டி இன்று நடக்கிறது. பயிற்சி போட்டிகளில் அசத்திய இந்திய அணியின் இளம் வீரர்கள், இதில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி இன்று மான்செஸ்டர், ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இந்திய அணி, சமீபத்தில் நடந்த மூன்று பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதிக நம்பிக்கையுடன் உள்ளது. துவக்க வீரர் பார்த்திவ் படேல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இன்று சச்சினுடன் இணைந்து களமிறங்க வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த மூன்று பயிற்சி போட்டியிலும் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா நம்பிக்கையுடன் செயல்பட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இதனால், இன்றும் அசத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
"மிடில் ஆர்டரில்' டிராவிட் வழக்கம் போல, "நங்கூர' ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பின்வரிசையில் கேப்டன் தோனி, ரெய்னா இருவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். இவர்கள் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது.
வினய் நம்பிக்கை:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பிரவீண் குமார் நம்பிக்கை தருகின்றார். இவருடன் வினய் குமாரும் இணைந்து தாக்குதல் தொடுத்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் தரலாம். சுழலில் அஷ்வின், அமித் மிஸ்ரா என இருவரும் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இதனால் முனாப் படேல், ஆர்.பி.சிங் இடம்பெறுவது கடினமே.
பிராட் கேப்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. "ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பிராட், "டுவென்டி-20' அணியின் கேப்டனாக <உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கீஸ்வெட்டருடன், அறிமுக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்கு சிறப்பான துவக்கம் தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' பீட்டர்சன், மார்கன், ரவி போபரா, சமித் படேல், ஜாஸ் பட்லர், பென் ஸ்டிரோக்ஸ் ரன் குவிப்பில் ஈடுபடலாம்.
பவுலிங்கில் ஸ்டூவர்ட் பிராட்டுடன், பிரஸ்னன், டெர்ன்பக், ஸ்டீவன் பின் கைகொடுக்க காத்திருக்கின்றனர். சுழலில் சுவான் தொல்லை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
பதிலடி கொடுக்குமா?
தற்போதைய "டுவென்டி-20' உலக சாம்பியன் இங்கிலாந்து அணி, சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் தோற்றுள்ளது. இதனால் இன்று உலக சாம்பியன் அந்தஸ்துக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்கலாம். அதேநேரம் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இதனால் இன்றைய போட்டியில் அதிக விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 30 August 2011

தோனிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

லீசெஸ்டெர்: இந்திய கேப்டன் தோனிக்கு டி மான்ட்போர்ட் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. டுவென்டி-20 பயிற்சி போட்டியின் முடிவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. திறமையான தலைமை மற்றும் சாதனைக்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக தோனிக்கு பாராட்டும் கிடைத்தது. இந்த பட்டம் பற்றி பேட்டியளித்த தோனி, இந்த பட்டத்தை பெறுவதன் மூலம் திக்குமுக்காடச்செய்கிறது. அதே நேரத்தில் பெருமையடைவதாகவும் உள்ளது. இந்த பட்டம் எனக்கு இந்திய அணி கேப்டனுக்காக வழங்கப்படுவதாக கருதவில்லை. ஒட்டு மொத்த அணிக்கும் வழங்கப்படுவதாக கூறினார்.

செப் 2 முதல் அரசு கேபிள்: ரூ 70க்கு 90 சேனல்கள் - ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: வரும் செப்டம் 2-ம் தேதி முதல் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படத் தொடங்கும் என்றும், இதன் மூலம் மக்களுக்கு 90 சேனல்கள் ரூ 70-க்கே கிடைக்கும் என்றும் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இன்று 110-வது பிரிவின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், இதன் காரணமாக இந்த தொழிலில் ஏகபோக நிலையை ஏற்படுத்தியவர்கள் அதிக லாபம் பெற்று வருகின்றனர், என்பதையும், இந்த மாமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

முந்தைய அரசால் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நிறுவனம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகளை வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக அரசு கேபிள் டி.வி. நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 31.3.2011 அன்றைய நிலவரப்படி 432 இணைப்புகளாக சுருங்கி விட்டது.

திமுக அரசு முடக்கியது

அதாவது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டு விட்டது. எனவேதான் அ.தி. மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கேபிள் டி.வி. தொழிலில் உள்ள ஏக போகத்தை தடுத்து அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இணைப்பு கொடுக்கும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

இந்த தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கை களை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கை களையும எனது அரசு தீவிரமாக மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு ஒரு முழு நேர தலைவர் மற்றும் இந்திய ஆட்சிப் பணியை சேர்ந்த ஒரு நிர்வாக இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும்

ஏற்கனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம் புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன. மீதமுள்ள 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில் நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும், அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களிடம் 1 கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.

கட்டணச் சேனல்களும்

31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்பிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெறும் ரூ 70 மட்டுமே

விரைவில் கட்டணச் சேனல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலம் வழங்கப்படும். 2.9.2011 முதல் ஒளிபரப் புச்சேவைகள் தொடங்கப்பட்டு குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கும் என்பதையும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒளிபரப்பை வழங்கும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு 20 ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் வசூலிக்கப்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்பை தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு ஜெயலலிதா அறிவி்த்தார்.

யாருக்குப் பெருநாள்?

- பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ


உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை,
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை,
காலையில் எழுந்து டீ / காபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை,
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை,
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!

தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத் தான் பெருநாள்...!

வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறை கடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித் தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட

உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!

எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்!

தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

9/11 தாக்குதல்: அமெரிக்க அரசு நடத்தியதாக 7ல் ஒரு அமெரிக்கர் நம்பிக்கை

லண்டன்:  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 7 பேரில் ஒருவர் 3 ஆயிரம் பேர் பலியான 9/11 தீவிரவாத தாக்குதலை அமெரிக்காவே தான் நடத்தியது என்று கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்த கருத்து கணிப்பில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தலா ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் 14 சதவீத பிரித்தானியர்களும், 15 சதவீத அமெரிக்கர்களும் 9/11 தீவிரவாத தாக்குதலுக்கு பின் அமெரிக்க நிர்வாகம் உள்ளதாக நினைக்கின்றனர் என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் கொய்தா தான் 9/11 தீவிரவாத தாக்குதலை நடத்தியது என்பது பொதுவான கருத்து. ஆனால் சிலர் இதில் அமெரிக்க அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுகின்றனர். அமெரிக்க அரசின் தலையீடு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.

16 முதல் 24 வயதுள்ள இளைஞர்களில் 24 சதவீதத்தினர் இந்த தாக்குதலுக்கு பின் பெரிய சதிக் கூட்டம் உள்ளது என்று நம்புகின்றனர். ஆனால் 68 சதவீதத்தினர் எந்தவித சதியும் இல்லை என்று நினைக்கின்றனர்.

" சதித்திட்ட கோப்புகள் - 10 ஆண்டுகளைத் தாண்டி" என்ற பிபிசி ஆவணப்படத்திற்காக இந்த கருத்த கணிப்பு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின் ஏதோ ரகசியம் உள்ளது என்று பலர் நம்புவது குறித்த ஆய்வு இது.

தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 28 August 2011

மதுரையில் இன்று விஜய் மக்கள் இயக்க மாநாடு... ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!

விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இது குறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இது குறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.

Thursday, 25 August 2011

அன்னா ஹசாரேவின் நிபந்தனைகளை ஏற்றது அரசு : நாளை பார்லிமென்டில் விவாதம்


புதுடில்லி: வலுவான ‌ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்த வேண்டி உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினருக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஹசாரே விதித்துள்ள 3 நிபந்தனைகளை ஏற்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால் கூறியதாவது, ஹசாரேவின் நிபந்தனைகளை அரசு ஏற்றுள்ளது. இதனையடுத்து, நாளை பார்லிமென்டில், ஜன் ‌லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற உள்ளது. இந்த மசோதா, விதி 193 கீழ் விவாதம் நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவி்ததார். 
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் 3 நிபந்தனைகள் :

1. மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏற்படுத்துவது குறித்து பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.

2. ஜன்லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்து இதன் மீது விவாதத்தைத் தொடங்க வேண்டும்.

3. கீழ்மட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

இந்த 3 நிபந்னைகளையும் அரசு ஏற்கும் பட்சத்தில் உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வரும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இந்த 3 நிபந்தனைகளை வலியுறுத்தி பிரதமருக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

இத்ற்கிடையில், இன்று மாலையில் பிரதமர் இல்லம் முன்பாக திரள அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இல்லத்தை சுற்றிலும் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. போலீசாரும் ரேஸ்கோர்சில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நி‌றைவேறும் வரை தான் சாக மாட்டேன் : இன்றைய உண்ணாவிரத பந்தலில் ஹசாரே பேசும் போது : தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும், மசோதா நிறைவேறும் வரை தனது போராட்டம் ஓயாது என்றும் லோக்பால் நி‌றைவேறும் வரை தான் சாக மாட்டேன் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பாராத் மாதாக்கி, வந்தே மாதரம் , என உரத்த குரலில் அவர் சில நிமிடம் பேசி விட்டு மீண்டும் மேடையில் அமர்ந்து கொண்டார். இதற்கிடையில் இவரது போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர், சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளனர். முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முழு அக்கறையுடன் இருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் கூறினார்.

பிரதமர் வீடு முன்பு கெரோ : ஹசாரே குழுவினரும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் தயார், ஆனால் யாரிடம், எங்கே என இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் இல்லை என குறைப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் லோக்சபாவில் ஹசாரே போராட்டம், மற்றும் ஊழல் விவகாரம் குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கை உள்ளிட்ட விவர அறிக்கையை அளித்தார். ஓய்வு பெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்., வர்மா , ஹசாரேயுடன் பேச்சு நடத்த கடிதம் மூலம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று மாலை நாட்டு மக்கள் அனைவரும் பிரதமர் ( 7 ஆர். சி. ஆர். ) இல்லத்தின் முன்பு திரள ( டில்லி சாலோ ) ஹசாரே குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மேலும் பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதை அரசு விரும்பவில்லை என்பதால் சமரச முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்கிடையில் பிரதமர் இல்லம் நோக்கி வந்த நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

ஹசாரவுக்கு சல்யூட் அடிக்கும் பிரதமர் : இன்று லோக்சபாவில் பேசிய பிரதமர், நாட்டில் ஊழல் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை சரி செய்ய எனது தலைமையிலான அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது .ஊழல், லஞ்சம் ‌பன்முக பிரச்னைகள‌ை கொண்டதாக இருக்கிறது. இதனை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோர்ட் மற்றும் பார்லி., பொதுக்கணக்கு குழு முன்பு உள்ள விஷயங்களை நான் பேச விரும்பவில்லை. லோக்பால் மசோதா நிறைவேற்றுவ‌தில் அன்னா ஹசாரே பரிந்துரைத்துள்ள வரைவு மசோதா பார்லி., நிலைக்குழு முன்பு இருக்கிறது. மேலும் அவரது கருத்துக்கள் பார்லியி.,ல் எழுப்பட்டும். ஹசாரேயை நான் ‌பாராட்டுகிறேன். அவருக்கு மரியாதை அளிக்கிறேன். இவர் தனது போராட்டத்தை கைவிட வேண்டும் . என்மீது கூறப்படும் புகார்கள் எதுவும் உண்மையல்ல. எதிர்கட்சிகள் திட்டமிட்டு தனிப்பட்ட தாக்குதலை நடத்துகிறது. குற்றம் இருந்தால் நிரூபிக்கட்டும். முரளிமனோகர் ஜோஷி என் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். இவ்வாறு பிரதமர் பேசினார்.

சபாநாயகர் ஹசாரேவுக்கு கோரிக்கை: பிரதமர் பேசி முடித்ததும், சபநாயகர் மீராகுமார் ஹச‌ோர தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். என எம்.பி.,க்கள் வாயிலாக கேட்டுக்கொள்வதாக கூறினார்.

"லோக்பால் மசோதா, நான்கு நாட்களில் வேண்டும் என, ஹசாரே விதித்த நிபந்தனையால், மத்திய அரசு, நேற்று அதிக வேகம் காட்டியது. காலை முதல், மாலை வரை, பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஹசாரே தன் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜன்லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் பலமான லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, கடந்த ஒன்பது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினத்திலிருந்து, இந்த விவகாரத்தில்அதிரடியான திருப்பங்கள் ஏற்பட்டன. மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அரசு தரப்பு பிரதிநிதியான பிரணாப் முகர்ஜியுடன், ஹசாரே குழுவினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பை தொடர்ந்து, அரசு தரப்பில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நேற்று காலை, ஹசாரே குழுவினருடன், இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடந்தது. சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இல்லத்தில் நடந்த சந்திப்பில், ஹசாரே தரப்பில் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி பங்கேற்றனர்.

இச்சந்திப்பின் போது, ஹசாரே குழு வைத்த கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாக தெரிகிறது. இருப்பினும், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது, லோக்பால் மூலம், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது உட்பட, மூன்று முக்கிய விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், ""லோக்பால் மசோதா தாக்கலாவதற்கு, இன்னும், 20 நாட்களுக்கு மேலாகும். இருப்பினும், இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவது முக்கியமானது' என்றார்.

இதைத் தொடர்ந்து, மாலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. இதில் பேசிய பிரதமர், ""அரசு தரப்பு மசோதாவையும், ஜன்லோக்பால் மசோதாவையும், பார்லி நிலைக்குழு விரைந்து பரிசீலிக்க கேட்டுக்கொள்வேன். லோக்பால் வரம்பிற்குள் என்னையும் (பிரதமர்) சேர்ப்பதற்கு சம்மதித்தேன். ஆனால், சக அமைச்சர்கள் தான் அதை ஏற்கவில்லை. ஹசாரே குழு தெரிவித்த கோரிக்கைகளை ஏற்றுள்ளோம். இருப்பினும், முழுமையாக ஏற்றுக்கொண்டோம் என்ற அர்த்தமாகாது'' என்றார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ""ஜன்லோக்பால் மசோதா, நாளையே(இன்று) பார்லிமென்டில் தாக்கலனால், ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட்டு விடுவார்'' என்றார்.

இறங்குகிறது அரசு: ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட செய்யும் முயற்சியாக, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று இரவு, ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது, ஹசாரே நிபந்தனைகளுடன் உடனடியாக லோக்பால் மசோதா உருவாக்க கால அவகாசம் தேவை என்ற கருத்து அரசிடம் உள்ளது. அதே சமயம், ஹசாரே உண்ணாவிரதம் முடிவுற்று சுமுக நிலை ஏற்பட்டால் தான், அரசு மீதான மக்கள் கோபம் குறையும் என்ற கருத்து மத்திய அரசிடம் ஏற்பட்டிருக்கிறது.

அன்னா ஹஸாரேவை சந்தித்த விஜய்-மக்கள் இயக்கத்தின் ஆதரவை தெரிவித்தார்

டெல்லி: ஊழலை ஒழிக்க வலுவான லோக்பாலர் மசோதா கோரி போராடும் அன்னா ஹஸாரேக்கு எனது மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஜய் கூறினார்.

அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தர இன்று காலை டெல்லி சென்றார் நடிகர் விஜய்.

உண்ணாவிரதப் பந்தலில் அவர் அன்னா ஹஸாரேவைச் சந்தித்து தனது உறுதியான ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்த்தாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என அவர் ஹஸாரேயிடம் தெரிவித்தபோது, மிக்க நன்றி என பதிலுக்கு சொன்னார் அன்னா.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரே நடத்தி வரும் இந்தப் போராட்டம் நம் தேச வரலாற்றில் முக்கியமான ஒன்று. எழுபத்தைந்து வயதிலும் பத்து நாட்களாக அவர் உண்ணாவிரதமிருப்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. இந்த நாட்டுக்காக, மக்கள் நலனுக்காக அவர் உண்ணாவிரதமிருக்கிறார். அது அவரது தேசப்பற்றை உலகுக்கே உணர்த்துவதாக உள்ளது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த தேசம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார் ஹஸாரே.

ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று இங்கு வந்தேன். அந்த உணர்வுடன் இன்று எனது அடையாள உண்ணாவிரதத்தை இங்கே மேற்கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.

அன்னாவின் உடல்நிலை நன்றாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொளகிறேன். தமிழ்நாட்டில் உள்ள எனது மக்கள் இயக்கம் அன்னாவின் போராட்டத்தை ஆதரிக்கும். இந்த போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்," என்றார்.

Friday, 19 August 2011

புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை:  புதிய தலைமைச் செயலக் கட்டிடம் பிரமாண்ட மருததுவமனையாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், "ஏ" பிளாக்கில் மருத்துவமனை, "பி" பிளாக்கில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி

இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ராம்லீலாவை விட்டுப் போக மாட்டேன்- அன்னா

டெல்லி: கடந்த 3 நாட்களாக திஹார் சிறையில் இருந்த அன்னா ஹஸாரே இன்று வெளியே வந்தார். மக்கள் புடை சூழ ராம்லீலா மைதானத்தை அடைந்த அவர் போராட்டத்தைத் தொடங்கினார். ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்று அமல்படுத்தும் வரை ராம் லீலா மைதானத்தை விட்டு போகப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் திஹார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹஸாரேவை வாசலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ஆதரவாளர்களும் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர். அவர்களிடையே சிறிது நேரம் மைக் மூலம் பேசினார் ஹஸாரே.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் என்றார் அன்னா.

டிரக்கில் ஊர்வலம்


பின்னர் அவர் அங்கிருந்து ஒரு டிரக் மூலம் கிளம்பினார். வேன் மீது தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி காணப்பட்ட அன்னாவை நோக்கி ஆதரவாளர்கள் உணர்ச்சி பொங்க கோஷமிட்டனர். பின்னர் அந்த டிரக்கில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார் ஹஸாரே. வழியெங்கும் கூடியிருந்த ஆதரவாளர்கள் அன்னாவுக்கு எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர்.

பலத்த மழை பெய்து வந்த போதிலும் மகக்கள் அதைப் பொருட்படுத்தாமல் அன்னாவுடன் ஊர்வலமாக சென்றனர். எழுச்சி பொங்க அன்னாவின் டிரக்கைச் சுற்றிலும், பின் தொடர்ந்தும் மக்கள் அலையென வந்ததைப் பார்த்தபோது உணர்ச்சிகரமாக இருந்தது.

மாயாபுரி வரை ஊர்வலமாக வந்த ஹஸாரே பின்னர் அங்கிருந்து ராஜ்காட்டுக்குச் சென்றார். காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு இந்தியா கேட்டுக்கு வந்தார் ஹஸாரே.

அதன் பின்னர் ராம்லீலா மைதானத்தை வந்தடைந்தார் ஹஸாரே. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஹஸாரேவை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களிடையே உற்சாகமாக தேசியக்கொடியைப் பிடித்து ஆட்டி பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டார் ஹஸாரே.

பின்னர் ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். கொட்டும் மழையில் நனைந்தபடி ஹஸாரே பேசினார்.

ஹஸாரே பேசுகையில், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கி விட்டது. நாட்டைப் பீடித்துள்ள ஊழலை விரட்டும் வரை நாம் ஓயக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும்.

ஒட்டுமொத்த நாடும் முற்றிலும் மாற வேண்டும். சாதாரண மக்களுக்காக நாம் இன்று அமைதி வழியில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். அந்த இலக்கை அடையும் வரை நாம் போராடுவோம்.

இந்த நாட்டின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். அவர்கள் விழித்தெழுந்தால் ஊழலை எளிதில் விரட்டலாம்.

கடந்த நான்கு நாட்களில் நான்கு மூன்று கிலோ எடை குறைந்து விட்டேன். நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறேன். இருந்தாலும் எனது தெம்பு போய் விடவில்லை.உங்களது ஆதரவுதான் எனது பலமே. நாட்டை களவாடி வரும் ஊழல்வாதிகளுக்கு இனியும் நாம் இடம் தரக் கூடாது.

நாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஆனால், நமது லட்சியத்தை அடையும் வரை போராடப் போகிறோம். ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை என்றார் அன்னா.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது. அன்னா ஹஸாரே திஹார் சிறையிலிருந்து ஊர்வலமாக வந்த மாயாபுரி, பின்னர் சென்ற ராஜ்காட், இந்தியா கேட் மற்றும் அங்கிருந்து வந்த ராம்லீலா மைதானம் என வரும் வழியெல்லாம் மக்கள் கூட்டம் கடல் போல திரண்டிருந்தது. இதனால் கிட்டத்தட்ட டெல்லியே ஸ்தம்பித்தது என்று கூறும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்கள் நிரம்பியிருந்தனர்.

அன்னாவின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்தது. இதை மீறப் போவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆவேசமடைந்த அன்னா சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அவருக்கு ஆதரவாக டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும், நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மத்திய அரசு பணிந்தது. அன்னாவை விடுதலை செய்தது.

இருப்பினும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளியே வர மாட்டேன் என்று அன்னா கூறி விட்டார். இதையடுத்து டெல்லி காவல்துறை, அன்னாவின் ஆதரவாளர்களோடு பேச்சு நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 15 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏற்பதாக அன்னா தரப்பு கூறி உத்தரவாதம் வழங்கி கையெழுத்தும் போட்டுக் கொடுத்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தில், எனது ஆதரவாளர்கள் யாரேனும் விதிமுறைகளை மீறினால் என் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று அன்னா ஹஸாரேவே உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பின்னர் தேவைப்பட்டால் நாட்களை நீடித்துக் கொள்ள முடியும் என்று அன்னா தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Sunday, 14 August 2011

இந்தியாவின் படு தோல்வி குறித்து விசாரணை நடத்தப்படும்-பிசிசிஐ

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் கூறுகையில், இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படும். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தற்போது டெஸ்ட் தொடர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. டுவென்டி 20 போட்டியிலும் இந்திய வீரர்கள் ஆடவுள்லனர். எனவே இப்போது அதுகுறித்து என்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது. வீரர்களின் கவனத்தை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை. தொடர்கள் முடிந்து நாடு திரும்பியதும் இதுகுறித்து ஆராயப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வீரேந்திர ஷேவாக், ஜாகீர் கான், கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் வெவ்வேறு முக்கிய கால கட்டங்களில் ஆட முடியாமல் போனதும், காயமடைந்ததும் அணிக்கு பெரும் பின்னடைவாகி விட்டது.

இந்திய அணி விளையாடிய சூழலையும், வீரர்களின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். முழு தகுதியுடன் கூடிய அணியாக நமது அணி மூன்று போட்டிகளிலும் ஆட முடியாமல் போய் விட்டது.எல்லோலும் நல்ல நிலையில் இருந்திருந்தால் இந்த தொடரின் நிலையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

டெஸ்ட் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கும், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருவதாக கூற முடி்யாது. அது தவறான கருத்து. முட்டாள்தனமானது. டெஸ்ட் போட்டிதான் கிரி்ககெட்டின் முன்னோடி. எனவே அதை புறக்கணித்து விட்டு மற்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் யாருமே. நாம் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்தபோதும், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை இருந்தபோதும் யாரும் இப்படி கேள்வி கேட்கவில்லை.

ஆனால் ஒரு போட்டித் தொடரில் மோசமாக செயல்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுகின்றன. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டு். ஒரு போட்டியில் அல்லது ஒரு தொடரில் தோற்பதன் மூலம் நமது சிறப்புகளையும், திறமைகளையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றார் சீனிவாசன்.

சீனிவாசன் அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, 13 August 2011

மூன்று சிக்சர்கள் விளாசிய பிரவீன் குமார்

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாமில் நடக்கும் 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியடையும் நிலையில் இருந்தபோது  8வது விக்கெட்டிற்கு இந்திய அணி கேப்டன் தோனியுடன் பிரவீண் குமார் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிதானமாக விளையாட மறுமுனையில் பிரவீண் குமார் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். பிரவீண் குமார் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்தியா 205 ரன்கள் எடுத்திருந்தபோது பிரவீண் குமார் அவுட்டானார். இதனையடுத்து குறைந்த பந்தில் அரைசதமடிக்கும் சாதனை நிகழ்த்துவதை தவற விட்டார். 8 வது விக்கெட்டிற்கு தோனி பிரவீண் குமார் ஜோடி 45 பந்துகளில் 75 ரன்கள் குவித்தது. அவர் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார். 

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: முதலிடத்தை இழந்தது

பர்மிங்ஹாம்: பிர்மிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. பர்மிங்ஹாமில் 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். காம்பீர் 38 ரன்களுக்கும், டிராவிட் 22 ரன்களுக்கும், லஷ்மன் 30 ரன்களுக்கும், பிரவீண் குமார் 26 ரன்களுக்கும்அவுட்டாயினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இங்கிலாந்து தரப்பில் பிராட், பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அதிரடியா விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் குக் அபாராமாக விளையாடி 294 ரன்களை குவித்தார். மோர்கன் 104 ரன்களுக்கும், ஸ்டிராஸ் 87 ரன்களுக்கும், பீட்டர்சன் 63 ரன்களுக்கும், பிரையர் 53 ரன்களுக்கும் அவுட்டாயினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 486 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். காம்பீர் 14 ரன்களுக்கும், டிராவிட் 18 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், ரெய்னா 10 ரன்களுக்கும் அவுட்டாயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அமீத் மிஸ்ரா 22 ரன்களுக்கும், பிரவீண் குமார் 40 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர். இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. தோனி தலைமையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பர்மிங்ஹாம் டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது.

இந்திய- இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத்தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 710 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

அந்த அணியின் துவக்க வீரர் அலிஸ்டர் குக் அபாரமாக ஆடி 294 ரன்களை குவித்தார். ஆனால், வெறும் 6 ரன்களில் அவர் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

இதைத்தொடர்ந்து, 486 இலக்குகள் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்து ஸ்கோரை சமன் செய்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரண்டாவது இன்னிங்சை இந்தியா ஆடத்துவங்கியது.

இந்த இன்னிங்சிலாவது ஆபத்பாந்தவன் பெயரை காப்பாற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் சேவாக் மீண்டும் ஏமாற்றினார். ஆம். இரண்டாவது இன்னிங்சிலும் ரன் ஏதும் எடு்க்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் சேவாக்.

ஒரே இன்னிங்சில் இரட்டை முட்டை போட்ட பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதனால், இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்து இக்கட்டான நிலையில் தத்தளிக்கிறது.

நேற்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்திருந்தது. டிராவிட் 18 ரன்களுடனும், கம்பீர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்வதற்கு இன்னும் 451 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால், மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Friday, 12 August 2011

தமிழகத்தில் நிலஅதிர்வு:மேஜை-சேர் உருண்டன பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்


ஆத்தூர்; தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர். 

சேலம் மாவட்டம் கிழக்குப்பகுதியான ஆத்தூர், தலைவால் பகுதிகளில் சவல்பட்டி, வெத்தூர், முல்லைவாடி, மணிவழுந்தூர், காட்டுக்கோட்டை, சார்வாய், சந்தேரி, வீரகனூர், மும்முடி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் இது உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர். 

உணர்ந்தவர்கள் பேட்டி: இது குறித்து மும்முடியை சேர்ந்த திருமால் என்பவர் கூறுகையில்; நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திடீரென மேஜை சேர்கள் உருண்டன. அதிர்ந்துபோனேன். உடனே பலரும் வெளியே ஓடி வந்து விட்டோம் என்றார் . தலைவாசல் பகுதி வக்கீல் பாஷாகான் கூறுகையில் ; நான் ஆபீசில் உட்கார்ந்திருந்தேன். திடீரென தலைசுற்றுவது போல் இருந்தது. சில நிமிடங்கள் இதனை உணர்ந்தேன் என்றார். பல பகுதியில் உள்ள ஆபீஸ் ஊழியர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் கட்டடத்தில் இருந்து வெளியேறி வீதியில் நின்றபடி இருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடிபகுதியிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட் எரைஞ்சி, எடைக்கால், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியிலும், பெரம்பலூரில் வேப்பந்தட்டை, பகுதியிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. கிராம மக்கள் கூறியதை அடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். எந்த அளவிற்கு இருந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த மாதம் இது போன்று நில அதிர்வு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 2.9 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த முறை 3 ரிக்டர் அளவாக இருக்கும் என தெரிகிறது.

வீடுகளில் விரிசல்: சேலம் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் சில வீடுகள் விரிசல் அடைந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலி கண்டபுரம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீடு சேதமடைந்தன.

பள்ளிகளுக்கு விடுமுறை: கடலூர் மற்றும் பெரம்பலூரில் அதிர்ச்சி ஏற்பட்டதை அடுத்து கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருச்சியிலும் நில அதிர்வு : திருச்சியில் நகர்ப்பகுதியான மன்னார்புரம், கண்டோண்மென்ட் , புறநகர்ப்பகுதியான சிறுகானூர், லால்குடி கொனலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த உணர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.


இன்று காலை ஜப்பானில் நில நடுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதம்- ஒரு ஜெர்மானியப் பயணியின் இனிய அனுபவம்

துபாய்: துபாயில் ரமலான் மாதத்தில் சுற்றுலாப் பயணியாக வருகை புரிந்த ஜெர்மனியைச் சேர்ந்த டேனியலுக்கு ரமலான் மாதம் இனிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவிப்பதாவது :

வியட்நாம், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் துபாய் வருகை புரிந்தவுடன் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் உணர்த்துகிறது.

கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இரவு நேரங்களில் அனைவரும் சிறப்புத் தொழுகைகளை தொழுது வருவது, சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் போட்டிகள் நடந்து வருவது, பகலில் நோன்பு வைக்காத பிற சமயத்தவர்கள் பொது இடங்களில் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நோன்பாளிகளுக்கு பிரியாணி உணவு பரிமாறப்படுவதையே பார்த்து வந்த எனக்கு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தினமும் 3000 பேருக்கு மேல் வழங்கி வருவது ஒரு வித்தியாசமான அனுபவம். மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் என்று வியந்து பாராட்டினார்.

பின்னர், நோன்பு திறப்பதற்கு முன்பு பொது இடத்தில் அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பதன் காரணமாக தமிழகத்து நோன்புக் கஞ்சியினை பார்சல் வாங்கிக் கொண்டு வாழ்த்துக் கூறி விடைபெற்றார் ஜெர்மானிய சுற்றுலாப் பயணி டேனியல்.

திருச்சியில் லேசான நில அதிர்ச்சி- மக்கள் பீதி

திருச்சி: திருச்சியில் இன்று முற்பகலில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இருப்பினும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி நகரின் சில பகுதிகளிலும் சிறுகனூர் என்ற இடத்திலும் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்தனர். முற்பகல் 11.20 மணியளவில் இது ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் லேசாக ஆடியதால் மக்கள் பீதியடைந்தனர்.

Thursday, 11 August 2011

சிங்களருக்கு இணையான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்கும் வரை எனது அரசு ஓயாது!- ஜெ

இலங்கையில் சிங்களருக்கு இணையாக அந்தஸ்து தமிழர்களுக்கும் கிடைக்கும்வரை எனது அரசு ஓயாது, என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

தமிழக சட்டப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முழு விவரம்:

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி...

இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கையின் போர்க்குற்றங்கள்...

இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

சாத்தான் வேதம் ஓதலாமா...

அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசாவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை

மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுதான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.

இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பதுதான்.

இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும்.

ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

நான் கொண்டு வந்த தீர்மானத்தின் தாக்கம்....

கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,

“போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால்தானே இந்த பேட்டி...

இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

-இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை-டாக்டர் ராமதாஸ் பேச்சு

வேலூர்: தமிழ்நாட்டை சீரழித்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இவற்றை ஒழிப்பதுதான் பாமகவின் முதல் வேலையாகும் என்று கட்சி தொடங்கிய நாள் முதல் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்து ஓய்ந்து போய் விட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை முதல் வேலையாக கொண்ட கட்சி பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்து புதிய சாதனை படைத்த கட்சி இது. இந்த நிலையில் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. எனவே அதை ஒழிப்பதுதான் பாமகவின் முதல்வேலைஎன்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படிக் கூறினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 1967-க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று 11 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான். சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும்.

சமச்சீர் கல்வியின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தைச் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும்

சமச்சீர் கல்வியில் முழு வெற்றி கிடைக்கவில்லை. கருணாநிதி அரைகுறை சமச்சீர் கல்வியைத்தான் கொண்டுவந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாமக மட்டுமே வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலையிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் மீட்பராகப் பாமக வந்துள்ளது என்றார் ராமதாஸ்.

இங்கிலாந்து "வேகத்தில்' சரிந்தது இந்தியா! * தோனி ஆறுதல் அரைசதம்

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு சுருண்டது. மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தோனி மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
சேவக் ஏமாற்றம்:
இங்கிலாந்து "வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக், தான் சந்தித்த முதல் பந்திலேயே "டக்' அவுட்டானார். இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்து, இவரது "கிளவ்ஸ்' பகுதியை உரசிச் சென்றது. அதனை பிடித்த விக்கெட் கீப்பர் பிரையர் "அவுட்' கேட்டார். இதனை ஏற்க அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் மறுத்தார். உடனே இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் "ரிவியு' கேட்டார். இதில் பந்து, "கிளவ்சில்' பட்டது உறுதி செய்யப்பட, சேவக் வெளியேற நேர்ந்தது.
விக்கெட் மடமட:
பின் இணைந்த, காம்பிர்-டிராவிட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது, பிரஸ்னன் பந்தில் காம்பிர் (38) போல்டானார். அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பிராட் வேகத்தில் நடையை கட்டிய சச்சின் (1), இம்முறையும் சதத்தில் சதம் காண தவறினார். பிரஸ்னன் பந்தில் "இந்திய பெருஞ்சுவர்' டிராவிட்டும் (22) சரிந்தார். ஆண்டர்சன் பந்தில் சுரேஷ் ரெய்னா (4), காலியானார். லட்சுமண் (30), பிரஸ்னன் பந்தில் தேவையில்லாத "ஷாட்' அடித்து வெளியேறினார். அமித் மிஸ்ரா (4) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
தோனி அரைசதம்:
 இந்த நேரத்தில் பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, பிரவீண் குமார் ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டது. ஆண்டர்சன், பிரஸ்னன், பிராட் பந்துகளில் தலா ஒரு சிக்சர் பறக்க விட்ட தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 22வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்த நிலையில், பிரஸ்னன் பந்தில் பிரவீண் (26) அவுட்டானார். தோனி 77 ரன்களுக்கு பிராட் பந்தில் வெளியேற, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. இஷாந்த் சர்மா (4), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பிரஸ்னன், பிராட் தலா 4, ஆண்டர்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.
நல்ல துவக்கம்:
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதம் கடந்த ஸ்டிராஸ்(52), குக்(27) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணியின் கைவசம் விக்கெட்டுகள் அப்படியே இருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை சோதனை காத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம்

சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் சமச்சீர் கல்வித் திட்ட நூல்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 9 கோடி புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1.2 கோடி மாணவ, மாணவிகள் சமச்சீர் கல்விப் புத்தகங்களைப் பெறுவார்கள்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்பதாகவும், உடனடியாக அது அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து புத்தகங்கள் அனைத்தும் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நேற்றே பள்ளிகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த வேலை முடிந்ததைத் தொடர்ந்து இன்று முதல் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. அவரவர் வகுப்பறையில் வைத்தே புத்தகங்களை தரவுள்ளனர் ஆசிரியர்கள்.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு லாரிகள், வேன்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் அனுப்பி வைத்தனர்.

புத்தகத்தில் மாற்றம் வருமா?

இதற்கிடையே திமுகவின் நலன்களைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் புத்தகங்களில் இருந்தால் அவற்றை அரசு நீக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே அதுபோன்றவற்றை அரசு தாள் ஒட்டி மறைத்தும், அந்தப் பக்கங்களை கிழித்தும் புத்தகங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி செய்ய முடியாத பக்கங்களில் உள்ள பாடங்களுக்குப் பதில் வேறு துணைப் பாடங்கள் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.