Monday, 30 May 2011

அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் சிக்கியது

சென்னை: சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிய லாரி மேற்கு வங்கத்தில் வைத்து பிடிபட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து அந்த லாரி ஜிப்சம் ஏற்றி வந்தபோதுதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். அந்த லாரியை போலீஸார் தமிழகத்திற்குக் கொண்டு வருகின்றனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் மரியம் பிச்சை. பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில், மே 23ம் தேதி காலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மரியம் பிச்சை பபயணித்த கார் டிரைவர் ஆனந்த்தை துருவித் துருவி விசாரித்தனர். அதேசமயம், விபத்துக்குக்காரணமான லாரியைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.

அந்த லாரி எங்கே போனது என்பது பெரும் குழப்பமாக இருந்து வந்தது. நாகர்கோவில், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த நிலையில்,சம்பந்தப்பட்ட லாரி எது என்பது தற்போது தெரிந்து விட்டது. அது ஒரு கண்டெய்னர் லாரியாகும். தூத்துக்குடியிலிருந்து சம்பவ தினத்தன்று ஜிப்சம் ஏற்றிக் கொண்டு அந்த லாரி மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போதுதான் பாடாலூரில் வைத்து அமைச்சரின் கார் விபத்துக்குள்ளாக காரணமாகியது. தற்போது இந்த லாரியை போலீஸார் மேற்கு வங்கத்தில் வைத்துப் பிடித்துள்ளனர். டிரைவரும் பிடிபட்டுள்ளார். லாரியையும், டிரைவரையும் தற்போது தமிழகத்திற்குக் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்த லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவராவார். அவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து வரவுள்ளனர்.

விரைவில் இந்த வழக்கில் மேலும் பல திருப்புமுனைத் தகவல்கள் வெளியாகலாம் என்று பேசப்படுகிறது.

நான்கு பேர் கோர்ட்டில் வாக்குமூலம்:

இந்த நிலையில், விபத்தை நேரில் பார்த்தவர்களான கார்த்திகேயன், வெங்கடேசன், சீனிவாசன், சரவணன் ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீஸார், அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் சட்ட விதி 164ன் கீழ் நான்கு பேரும் தனித் தனியாக ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

கனிமொழி-சரத் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.

இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதை இன்று நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாரும் சிறையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் கனிமொழி. அதில், தனக்கு பள்ளிக்குச் செல்லும் குழந்தை உள்ளது. கணவர் வேலை விஷயமாக வெளிநாட்டில் தங்கியுள்ளார். எனவே அதைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் கனிமொழி. கனிமொழி சார்பில் வக்கீல்கள் வி.ஜி.பிரகாசம், அரிஸ்டாட்டில், சுதர்சன் ராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந்த மனு கடந்த 24ம் தேதி நீதிபதி அஜீத் பரிகோக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பரிகோக், 30ம் தேதியன்று சிபிஐ இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

மேலும் இந்த வழக்கின் நிலவர அறிக்கையையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும், வழக்கு விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையு்ம் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந் நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார் ராஜாத்தி அம்மாள்.

மேலும் கனிமொழியின் கணவர் அரவிந்தன், அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில திமுக பிரமுகர்களும் நீதிமன்றம் வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார்.

நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார். இதில் எப்போது தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரியவில்லை.

இதேபோல கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்த மனு மீதும் இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து அதன் மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்ததால் ஹைகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

கரீம் மொரானிக்கு ஜாமீன் மறுப்பு:

இந் நிலையில் இதே 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க பாட்டிலாயா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனம் தான் சினியுக். இந்த நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்க உதவியதாகவும் அதற்காக ரூ. 6 கோடியைப் பெற்றார் என்றும் கரீம் மொரானி மீது சிபிஐ குற்றம் சாட்டியது.

இதையடு்த்து தனக்கு ஜாமீன் கோரி அவர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்தப் பணத்தை பெற்றதாகத் தான் கனிமொழியையும் சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது.

சாதித்துக் காட்டிய சென்னை கிங்ஸ் அணி: விஜய், அஷ்வினுக்கு தோனி பாராட்டு

சென்னை: ஐ.பி.எல்., அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இம்முறை சாம்பியன் கனவை நனவாக்கிய முரளி விஜய் அஷ்வினை, கேப்டன் தோனி வெகுவாக பாராட்டினார்.
இந்தியாவின் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பைனலில் அபாரமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(205/5), பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை(147/8) வீழ்த்தி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை இரண்டு முறை(2010, 11) வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை சென்னை அணி படைத்தது.
தமிழகத்துக்கு "ஜே':
அணியின் வெற்றியில் தமிழக வீரர்களான முரளி விஜய் (95 ரன்கள்), அஷ்வின்(3 விக்கெட்) முக்கிய பங்கு வகித்தனர். "ஆபத்தான' பெங்களூரு வீரர் கெய்லை "டக்' அவுட்டாக்கிய அஷ்வின், மீண்டும் ஒரு முறை தனது சுழல் திறமையை வெளிப்படுத்தினார். சென்னை அணிக்கு இன்னொரு முறை கோப்பை பெற்று தந்த "லக்கி' கேப்டன் தோனி கூறியது:
பைனலில் வெல்வதே ஒவ்வொரு வீரரின் நோக்கமாக இருக்கும். இதற்கேற்ப சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அபார துவக்கம் தந்தனர். இவர்கள் 15வது ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதனால் தான் 200 ரன்களுக்கும் மேலான ஸ்கோரை எட்ட முடிந்தது.
அஷ்வின் மிகுந்த துணிச்சலாக பந்துவீசினார். "பீல்டிங்' கட்டுப்பாடு இருக்கும் போது வெளிவட்டத்தில் இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள். இதனைப் பற்றி கவலைப்படாமல், பந்தை நல்ல உயரத்தில் வருமாறு சாதுர்யமாக வீசினார். அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தார்.
கடந்த ஐ.பி.எல்., தொடரில் தட்டுத்தடுமாறி தான் அரையிறுதிக்குள் நுழைந்தோம். இம்முறை ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடியதால், சிரமமின்றி கோப்பை வென்றோம்.
சிறிது ஓய்வு:
களத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்ட அணிக்கான நன்னடத்தை விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டால் தான் வெற்றி பெற இயலும் என்று சொல்வார்கள். ஆனால், நேர்மையான முறையில் நடந்து கொண்டு, வெற்றியும் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கே செல்லவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்காத நிலையில், ராஞ்சிக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன்.
ரசிகர்கள் சோர்வு:
உலக கோப்பை தொடர் முடிந்த கையுடன் ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தது கடினமானதாக தான் இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் உலக கோப்பை வெல்ல வேண்டுமென விரும்பினார்கள். இதற்கேற்ப நாங்களும் வென்று காட்டினோம். உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிப்பூர்வமாக சோர்வடைந்த ரசிகர்கள், துவக்கத்தில் ஐ.பி.எல்., போட்டிகளை காண அதிகளவில் வரவில்லை. போகப் போக போட்டியை காண ஆர்வத்துடன் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
இவ்வாறு தோனி கூறினார்.
தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் வெட்டோரி கூறுகையில்,""பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தவறினோம். 200 ரன்களுக்கு மேல் செய்வது "சேஸ்' செய்வது கடினம். 160 முதல் 170 ரன்கள் என்றால் "சேஸ்' செய்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக இத்தொடர் சிறப்பானதாக அமைந்தது. லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதை சாதனையாக கருதுகிறேன்,''என்றார்.
இரவெல்லாம் உற்சாகம்
கோப்பை வென்ற உற்சாகத்தை அதிகாலை வரை சென்னை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் அனைவரும் பங்கேற்றனர். கால்பந்து பிரியரான கேப்டன் தோனி மட்டும் தனது மனைவியுடன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலை பார்த்தாராம். இதில், தனக்கு பிடித்தமான மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்சிலோனாவிடம் தோற்றதால் மிகுந்த கவலை அடைந்திருக்கிறார். பின் சக வீரர்களுடன் சேர்ந்து "பார்ட்டி'யில் சிறிது நேரம் பங்கேற்றுள்ளார்.
விருதுகளும்...பரிசுகளும்...
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சாதித்த அணிகள் மட்டுமின்றி தனிப்பட்ட வீரர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
* கோப்பை வென்ற சென்னை அணி ரூ. பத்து கோடி பரிசாக பெற்றது.
* இரண்டாவது இடம் பிடித்த பெங்களூரு அணி ரூ. ஐந்து கோடி பரிசாக பெற்றது.
* ஆட்ட நாயகன் விருது வென்ற முரளி விஜய்( 95 ரன்கள்) ரூ. ஐந்து லட்சம் பரிசாக பெற்றார்.
* இத்தொடரில், 608 ரன்கள் குவித்த பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் தொடர் நாயகன் விருதை வென்றார். இவருக்கு ரூ. ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. தவிர, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த இவர், "ஆரஞ்ச்' நிற தொப்பியை கைப்பற்றியதால், ரூ. பத்து லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொடரில் அதிக "சிக்சர்' (44) விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்த பெருமை இவரையே சேரும்.
* இத்தொடரில், அதிக விக்கெட்(28 விக்கெட்) வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லா, 15 போட்டிகளில் 16 விக்கெட் கைப்பற்றினார். இதனால் வளரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு ரூ. பத்து லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது.
* அதிக "கேட்ச்' பிடித்தவர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்டு(10 "கேட்ச்')ரூ. பத்து லட்சம் பரிசாக பெற்றார்.
* சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் வல்தாட்டி, 63 பந்தில் 120 ரன்கள் எடுத்தார். தவிர இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். இதனால் தனிநபர் சாதனையாளர் விருது வென்ற இவருக்கு, கார் ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டது.
* இத்தொடரின் சிறந்த ஆடுகளத்திற்கான விருது, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

Sunday, 29 May 2011

ஒபாமாவின் மிகப்பெரிய ஊழல் விரைவில் வரும்?

லண்டன் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அரசின் முதல் மிகப் பெரிய ஊழல் விரைவில் வெளிப்படப் போவதாக, அரசியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவில் அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அந்தத் தேர்தலுக்கு முன், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்று வெளியுலகுக்கு தெரிய வரும் என்று பிரண்டன் நைஹான் என்பவர் தெரிவித்துள்ளார்.பிரண்டன் நைஹான், அமெரிக்காவில் அரசியல் நிபுணராகவும், ஊடக விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார்.இவர், 1977 முதல் 2008 வரையிலான அமெரிக்க அதிபர்களின் ஊழல்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மிச்சிகன் பல்கலையில் இப்பணியை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் மற்றும் ஊடகத் துணையுடன், அதிகார வர்க்கத்தின் மேல் மட்டத்தில் நிகழும் தவறான நடவடிக்கைகள் தான் ஊழல். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஒபாமாவின் ஊழல், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் வெளியுலகுக்கு தெரிய வரும். அமெரிக்காவின் மிகச் சில அதிபர்கள் தாங்கள் ஆட்சியில் நீடிப்பதற்காக, ஊழலைத் தவிர்த்தனர். இதை அதிபர்கள் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் நான் கண்டறிந்தேன். அவ்வகையில் ஒபாமா மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்.ஒபாமா நிர்வாகத்துக்கு ஆதரவாக இல்லாத ரிபப்ளிகன் கட்சியின் ஒரு சிலரின் ஆதரவுடன், நான் எனது ஆய்வை முடித்துள்ளேன். தங்கள் ஆட்சியில் முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்தித்த ரொனால்ட் ரீகன் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோரைப் போல, ஒபாமாவும் வீழ்ச்சியடைவார்.இவ்வாறு பிரண்டன் நைஹான் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன்! *விஜய், அஷ்வின் அபாரம்

சென்னை: ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல், "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று சென்னையில் நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"சிக்சர்' மழை:
சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து "சூப்பர்' அடித்தளம் அமைத்தனர். பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்த விஜய், அரவிந்த் பந்தை சிக்சருக்கு விரட்டி அதிரடியை துவக்கினார். மறுபக்கம் மிகவும் "பிசி'யாக இருந்த ஹசி, முன்னணி வீரரான ஜாகிர், முகமது பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து கெய்ல், வெட்டோரி சுழலில் விஜய் சிக்சர் அடிக்க, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின் மிதுன் ஓவரில் 2 பவுண்டரி அடித்த விஜய் 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். தனது வாணவேடிக்கையை தொடர்ந்த இவர், அரவிந்த் வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்தார். மறுபக்கம் வெட்டோரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹசி அரைசதம் கடந்தார். முகமது வீசிய போட்டியின் 15வது ஓவரில் ஹசி, விஜய் தலா ஒரு சிக்சர் அடித்தனர். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க பார்த்த, ஹசி(63) பரிதாபமாக அவுட்டானார்.
நழுவிய சதம்:
அடுத்து வந்த கேப்டன் தோனி ரன்வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இவர், கெய்ல் ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்தார். அரவிந்த் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை தூக்கி அடித்த விஜய், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவர் 52 பந்தில் 95 ரன்கள்(4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இரண்டாவது பந்தில் தோனி(22) அவுட்டானார். அடுத்த பந்தை ரெய்னா தடுத்து ஆட, அரவிந்தின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. நான்காவது பந்தில் ரெய்னா சிக்சர் அடித்து அசத்தினார்.
கெய்ல் வீசிய கடைசி ஓவரில் ஆல்பி மார்கல்(2) முதலில் வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா(8) போல்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்து, 200 ரன்களை கடக்க உதவினார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. பிராவோ(6) அவுட்டாகாமல் இருந்தார்.
அஷ்வின் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, சென்னை கிங்ஸ் விரித்த "சுழல்' வலையில் அப்படியே சிக்கியது. முதல் ஓவரிலேயே அஷ்வின் பயங்கர "ஷாக்' கொடுத்தார். இவரது சுழலில் "அதிரடி' கெய்ல் "டக்' அவுட்டாக, சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இத்தொடர் முழுவதும் அசத்திய கெய்ல், மிக முக்கியமான பைனலில் கோட்டை விட்டதால், அரங்கில் அமர்ந்திருந்த பெங்களூரு அணியின் உரிமையாளர் மல்லையா அதிர்ச்சியில் உறைந்தார்.
சொதப்பல் ஆட்டம்:
அடுத்து வந்தவர்களும் சொதப்பலாக ஆடினர். தொடர்ந்து அகர்வாலை(10) வெளியேற்றிய அஷ்வின் இன்னொரு "அடி' கொடுத்தார். ஜகாதி சுழலில் டிவிலியர்ஸ்(18), பாமர்ஸ்பச்(2) சிக்கினர். போராடிய விராத் கோஹ்லி(35), ரெய்னா பந்தில் அவுட்டாக, பெங்களூரு கதை முடிந்தது. மீண்டும் பந்துவீச வந்த அஷ்வின், கேப்டன் வெட்டோரியை(0) வெளியேற்றினார். ஜாகிர் 21 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சவுரப் திவாரி(42*) ஆறுதல் அளித்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இவ்வெற்றியின் மூலம் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் முதல் அணி என்ற சாதனையை சென்னை கிங்ஸ் அணி படைத்தது.
ஆட்ட நாயகன் விருதை முரளி விஜய் வென்றார்.



"ஆரஞ்ச் கேப்' கெய்ல்
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியின் கெய்ல், 608 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடம் பெற்று, இதற்கான "ஆரஞ்ச்' தொப்பியை தட்டிச் சென்றார். இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த "டாப்-10' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    ரன்கள்
1. கெய்ல்(பெங்களூரு)    12    608
2. கோஹ்லி (பெங்களூரு)    16    557
3. சச்சின் (மும்பை)    16    553
4. மார்ஷ் (பஞ்சாப்)    14    504
5. ஹசி (சென்னை)    14    492

மலிங்கா அபாரம்
பவுலிங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மும்பையின் மலிங்கா (28) முதலிடத்தை பெற்று, இதற்காக "பர்பிள் கேப்' பரிசை பெற்றார். இவ்வரிசையில் "டாப்-5' வீரர்கள் விவரம்:
பெயர்/அணி    போட்டி    விக்.,
1. மலிங்கா (மும்பை)    16    28
2. முனாப் படேல் (மும்பை)    15    22
3. அரவிந்த் (பெங்களூரு)    13    21
4. அஷ்வின் (சென்னை)    16    20
5. அமித் மிஸ்ரா (டெக்கான்)    14    19

இதுவரை சாம்பியன்கள்
ஆண்டு    சாம்பியன்    எதிரணி
1. 2008    ராஜஸ்தான் ராயல்ஸ்    சென்னை சூப்பர் கிங்ஸ்
2. 2009    டெக்கான் சார்ஜர்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
3. 2010    சென்னை சூப்பர் கிங்ஸ்    மும்பை இந்தியன்ஸ்
4. 2011    சென்னை சூப்பர் கிங்ஸ்    பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சாதனை ஜோடி
ஐ.பி.எல்., வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (159) சேர்த்த ஜோடி என்ற பெருமையை, சென்னை அணியின் முரளி விஜய், மைக் ஹசி பெற்றது. இதற்கு முன் கில்கிறிஸ்ட்-லட்சுமண் இணைந்து, மும்பை அணிக்கு எதிராக 155 ரன்கள் (2008) எடுத்து இருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் "விசில்' அடிங்க...
சென்னை அணியின் சாம்பியன் கனவுக்கு தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் கைகொடுத்தனர். பேட்டிங்கில் அசத்திய முரளி விஜய் 95 ரன்கள் விளாசினார். இவர், ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அதிக சிக்சர் (6) அடித்தவர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2008 பைனலில், ராஜஸ்தானின் யூசுப் பதான் (எதிரணி-சென்னை), 4 சிக்சர் அடித்திருந்தார்.
இதே போல சுழலில் அசத்திய அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி, அன்னிய வீரரான கெய்லை நம்பி ஏமாந்தது. ஆனால், சென்னை அணி மண்ணின் மைந்தர்களை நம்பி சந்தித்தது.

 தோனியின் சாதனை பயணம்
தோனியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இவரது தலைமையில், இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய சாம்பியன் பட்டங்கள்...
ஆண்டு/மாதம்    வென்ற கோப்பை
1. 2007/ஆகஸ்ட்    "டுவென்டி-20' உலக கோப்பை
2. 2010/ஏப்ரல்    ஐ.பி.எல்., "டுவென்டி-20' கோப்பை
3. 2010/செப்டம்பர்    ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் கோப்பை
4. 2011/ஏப்ரல்    உலக கோப்பை (50 ஓவர்)
5. 2011/மே    ஐ.பி.எல்., "டுவென்டி-20'

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)மிதுன்(ப)முகமது    63(45)
விஜய்(கே)வெட்டோரி(ப)அரவிந்த்    95(52)
தோனி(கே)கோஹ்லி(ப)அரவிந்த்    22(13)
ரெய்னா(ப)கெய்ல்    8(5)
மார்கல்(கே)கோஹ்லி(ப)கெய்ல்    2(4)
பத்ரிநாத்-அவுட் இல்லை-    0(0)
பிராவோ-அவுட் இல்லை-    6(1)
உதிரிகள்    9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,)    205
விக்கெட் வீழ்ச்சி: 1-159(மைக் ஹசி), 2-188(முரளி விஜய்), 3-188(தோனி), 4-199(மார்கல்), 5-199(ரெய்னா).
பந்து வீச்சு: ஜாகிர் கான் 4-0-30-0, அரவிந்த் 3-0-39-2, கெய்ல் 4-0-34-2, சையது முகமது 3-0-39-1, வெட்டோரி 4-0-34-0, அபிமன்யு மிதுன் 2-0-22-0.
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(ப)அஷ்வின்    10(5)
கெய்ல்(கே)தோனி(ப)அஷ்வின்    0(3)
கோஹ்லி-எல்.பி.டபிள்யு(ப)ரெய்னா    35(32)
டிவிலியர்ஸ்-எல்.பி.டபிள்யு(ப)ஜகாதி    18(12)
பாமர்ஸ்பச்(கே)+(ப)ஜகாதி    2(3)
திவாரி-அவுட் இல்லை-    42(34)
வெட்டோரி(கே)+(ப)அஷ்வின்    0(1)
மிதுன்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ    11(8)
ஜாகிர்(கே)ஹசி(ப)போலிஞ்சர்    21(21)
சையது-அவுட் இல்லை-    2(2)
உதிரிகள்    6
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,)    147
விக்கெட் வீழ்ச்சி: 1-1(கிறிஸ் கெய்ல்), 2-16(அகர்வால்), 3-48(டிவிலியர்ஸ்), 4-62(பாமர்ஸ்பச்), 5-69(விராத் கோஹ்லி), 6-70(வெட்டோரி), 7-92(அபிமன்யு மிதுன்), 8-130(ஜாகிர் கான்).
பந்து வீச்சு: அஷ்வின் 4-0-16-3, மார்கல் 3-0-24-0, போலிஞ்சர் 3-0-28-1, ஜகாதி 4-0-21-2, ரெய்னா 4-0-39-1, பிராவோ 2-0-15-1.

Saturday, 28 May 2011

பைனலில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்! * கெய்ல் புயலில் சச்சின் அணி "அவுட்'


சென்னை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி "சூப்பராக' முன்னேறியது. நேற்று நடந்த "நாக்-அவுட்' போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு வீரர் கெய்லின் புயல் வேக ஆட்டத்தில் சிதறிய சச்சின் தலைமையிலான மும்பை அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று சென்னையில் நடக்கும் பைனலில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை அணி, சொந்த மண்ணில் அசத்தி மீண்டும் கோப்பை கைப்பற்ற காத்திருக்கிறது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த "பிளே ஆப்' சுற்றின் "நாக்-அவுட்' போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிரடி துவக்கம்:
பெங்களூரு அணிக்கு மீண்டும் ஒரு முறை கிறிஸ் கெய்ல் அதிரடி துவக்கம் தந்தார். அகமது வீசிய முதல் ஓவரில் ஆசை தீர அடித்து நொறுக்கிய இவர், மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. இது தான் ஐ.பி.எல்., அரங்கின் முதல் ஓவரில் வழங்கப்பட்ட அதிகபட்ச ரன். மறுபக்கம் அசத்திய அகர்வால், ஹர்பஜன் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். மலிங்கா வேகத்திலும் கெய்ல் 2 பவுண்டரி அடிக்க, கேப்டன் சச்சின் செய்வதறியாது திகைத்தார். தொடர்ந்து ஹர்பஜன் ஓவரில் அகர்வால் தன் பங்குக்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில் போலார்டு பந்தில் அகர்வால்(41) அவுட்டானார்.
கெய்ல் 89 ரன்:தனது வாணவேடிக்கையை தொடர்ந்த கெய்ல், ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். பின் முனாப் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற இவர், பிராங்க்ளினின் கலக்கல் "கேட்ச்சில்' 89 ரன்களுக்கு(9 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார்.
 கோஹ்லி ஏமாற்றம்:அடுத்து வந்தவர்கள் ஏமாற்றினர். விராத் கோஹ்லி(8), அகமது பந்தில் போல்டானார். முனாப் பந்தில் மலிங்காவின் சூப்பர் "கேட்ச்சில்' பாமர்ஸ்பாச்(4) வெளியேறினார். கடைசி 32 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ்(21), சவுரப் திவாரி(8) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் மடமட:
கடின இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பலாக ஆடியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். அரவிந்த் பந்தில் பிலிசார்டு(10) காலியானார். அடுத்து வந்த ஹர்பஜனும்(13), அரவிந்த் வேகத்தில் வெளியேறினார். போராடிய சச்சின்(40), முகமது சுழலில் வீழ்ந்தார்.
வெட்டோரி அசத்தல்:
போட்டியின் 11வது ஓவரை வீசிய கேப்டன் வெட்டோரி இரட்டை "அடி' கொடுத்தார். முதலில் ரோகித் சர்மாவை(13) அவுட்டாக்கினார். அடுத்து ராயுடுவை(0) வெளியேற்றினார். தனது அடுத்த ஓவரில் போலார்டு(3) விக்கெட்டை கைப்பற்றிய வெட்டோரி, மும்பை அணியின் வெற்றி கனவை தகர்த்தார். ஜாகிர் வேகத்தில் பிராங்க்ளின்(16) போல்டானார். "டெயிலெண்டர்களும்' சோபிக்கத் தவற, மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சதிஷ்(18), அகமது(18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை கெய்ல், 6வது முறையாக தட்டிச் சென்றார்.


தவறு செய்த சச்சின்மும்பை அணியின் கேப்டன் சச்சினுக்கு நேற்று எதுவுமே சரியாக அமையவில்லை. "டாஸ்' வென்ற இவர் "பேட்டிங்' தேர்வு செய்ய தவறினார். தவிர, அனுபவ வீரரான மலிங்கா, முனாப் போன்றவர்கள் இருக்கும் போது, முதல் ஓவரை பந்துவீச இந்தியாவின் இளம் அகமதுக்கு வாய்ப்பு அளித்தார். இதனை பயன்படுத்திய கெய்ல் அடித்து நொறுக்க, ஒட்டுமொத்தமாக 27 ரன்கள் எடுக்கப்பட்டன. முதல் ஓவரில் செய்த இந்த தவறு, மும்பை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.


ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)ரோகித்(ப)போலார்டு 41(31)
கெய்ல்(கே)பிராங்க்ளின்(ப)முனாப் 89(47)
கோஹ்லி(ப)அகமது 8(12)
டிவிலியர்ஸ்-அவுட் இல்லை- 21(15)
பாமர்ஸ்பாச்(கே)மலிங்கா(ப)முனாப் 4(4)
திவாரி-அவுட் இல்லை- 8(12)
உதிரிகள் 14
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 185
விக்கெட் வீழ்ச்சி: 1-113(அகர்வால்), 2-148(கெய்ல்), 3-151(கோஹ்லி), 4-157(பாமர்ஸ்பாச்).
பந்துவீச்சு: அகமது 4-0-56-1, ஹர்பஜன் 4-0-40-0, மலிங்கா 4-0-24-0, முனாப் 4-0-27-2, ரோகித் 1-0-14-0, போலார்டு 3-0-24-1.
மும்பை இந்தியன்ஸ்
பிலிசார்டு(கே)அகர்வால்(ப)அரவிந்த் 10(11)
சச்சின்(ஸ்டம்)டிவிலியர்ஸ்(ப)முகமது 40(24)
ஹர்பஜன்(கே)பாமர்ஸ்பாச்(ப)அரவிந்த் 13(7)
ரோகித்(கே)பாமர்ஸ்பாச்(ப)வெட்டோரி 13(15)
பிராங்க்ளின்(ப)ஜாகிர் 16(17)
ராயுடு எல்.பி.டபிள்யு.,(ப)வெட்டோரி 0(1)
போலார்டு(கே)மிதுன்(ப)வெட்டோரி 3(6)
சதிஷ்-அவுட் இல்லை- 18(22)
மலிங்கா(கே)பாமர்ஸ்பாச்(ப)முகமது 7(5)
அகமது-அவுட் இல்லை- 18(13)
உதிரிகள் 4
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-23(பிலிசார்டு), 2-41(ஹர்பஜன்), 3-68(சச்சின்), 4-82(ரோகித்), 5-83(ராயுடு), 6-89(போலார்டு), 7-99(பிராங்க்ளின்), 8-110(மலிங்கா).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-32-1, அரவிந்த் 3-0-27-2, கெய்ல் 3-0-11-0, மிதுன் 2-0-26-0, வெட்டோரி 4-0-19-3, முகமது 4-0-25-2.

Friday, 27 May 2011

அதிரை பைத்துல்மால் சார்பாக நடைபெறும் திருக்குர் ஆன் மாநாடு நேரலை

அதிரை பைத்துல்மால் சார்பாக நடைபெறும் திருக்குர் ஆன் மாநாடு நேரலையாக காண க்ளிக் செய்யவும்திருக்குர் ஆன் மாநாடு

அதிராம்பட்டினம் பள்ளிகளின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விபரம்

இன்று 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின.  இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
அதிராம்பட்டினத்தில் இந்த ஆண்டு மாணவிகளே முதல் மூன்று இடங்களையும் பெற்றனர்.
   
     1.சகீரா : 482   (காதர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ) 
     2.நபீஸா : 481    (காதர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி )
     3.அல் ஜசீரா : 474 (இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி )


அதிரையின் முக்கிய மூன்று பள்ளிகளின் முடிவுகள் விபரம்:


காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி:-
           
                       தேர்வு எழுதியவர்கள்:  187
                               தேர்ச்சி பெற்றவர்கள்:  174
                               தேர்ச்சி சதவீதம்:  93%
                               பள்ளி முதலிடம் : ரியாசுதீன்(459)
                               பள்ளி இரண்டாமிடம் : வின்சன்ட் பளித் பிரீடோ(444)
                               பள்ளி மூன்றாமிடம் : சேக் அலாவுதீன்(442)


காதர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி:-


                        தேர்வு எழுதியவர்கள்:  144
                                தேர்ச்சி பெற்றவர்கள்:  139
                                தேர்ச்சி சதவீதம்:  97%
                                 பள்ளி முதலிடம் : சகீரா(482)
                                 பள்ளி இரண்டாமிடம் : நபீஸா(481)
                                 பள்ளி மூன்றாமிடம் : மலர்விழி(468)


இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:-


                         தேர்வு எழுதியவர்கள்:  55
                                 தேர்ச்சி பெற்றவர்கள்:  50
                                 தேர்ச்சி சதவீதம்:  91%
                                 பள்ளி முதலிடம் : அல் ஜசீரா(474)
                                 பள்ளி இரண்டாமிடம் : பாஹிமா பாத்திமா(473)
                                 பள்ளி மூன்றாமிடம் : வசீமா(472)

                          தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம் : 2 வது இடத்தை 11 பேர் பிடித்தனர்; 3 வது இடம் 24 பேர்


சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மின்னலாதேவி உட்பட 5 மாணவிகள் முதல் ராங்க் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியானது. இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும்.
விருதுநகர் , திருவண்ணாமலை,சென்னை, ஈரோடு , சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 பேர் முதல் ரேங்கை தட்டிப்பறித்துள்ளனர். இவர்கள் 5 பேரும் 500க்கு 496 மார்க் பெற்றுள்ளனர். 5 பேரும் மாணவிகளே ஆவர். இரண்டாமித்தை 495 மார்க்குகள் பெற்று 11 பேர் பிடித்துள்ளனர். 494 மார்க்குகள் பெற்று 24 பேர் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த 5 மாணவிகள் விவரம்: எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு:

நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்,

ரம்யா- ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்.

சங்கீதா- முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் , சேலம் ,

மின்னலா தேவி , செய்யாறு, அரசுமேல்நிலைப்பள்ளி,

ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.

கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 13 ஆயிரம் பேர்:

பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 12 ஆயிரத்து 532 பேர் நூற்றுக்கு நூறு மார்க்குகள் பெற்றுள்ளனர். அறிவியலில் 3 ஆயிரத்து 677 பேரும், சமூக அறிவியலில் 756 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மாநிலத்தில் 2 ம் இடம் பிடித்த 11 பேர் யார் ? யார்? : 495 மார்க்குகள் பெற்று 11 மாணவ, மாணவிகள் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் ,ஊர் மற்றும் பள்ளிகளின் விவரம் வருமாறு: 

சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலப்பள்ளி , மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.

பாக்கியஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைலப்பள்ளி, தூத்துக்குடி மாவட்டம், 

அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி அபிராமம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம். 

ஜெயப்பிரியா எஸ்.எச்.என்., எத்தேல் ஹார்வே மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் , விருதுநகர் மாவட்டம். 

ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம். 

பொன்மணி, எஸ்.ஆர்.பி.ஏ.,கே.டி., மகளிர் மேல்நிலைப்பள்ளி ராஜபாளையம்.

கார்த்திக் . செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள்பேட்டை புதுச்சேரி, 

சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, 

புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி , பொன்னேரி.

சுஷ்மிதா, பென்டின் சி.கே., மகளிர் மேல்நிலைப்பள்ளி வேப்பேரி, வடசென்னை.



விவசாயி மகளுக்கும் முதலிடம்: ஆத்தூர் தலைவாசல் வி.கூட்டு‌‌ரோடு பகுதியில் இருக்கும் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சங்கீதா 500க்கு 496 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்திவேல் விவசாயி. இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் தமிழ்- 98 ; ஆங்கிலம் - 99; கணிதம் - 100; அறிவியல் - 100; சமூக அறிவியல் - 99
டாக்டராவேன் என்கிறார் அரசுப்பள்ளி மாணவி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலாதேவி அளித்த பேட்டியில் : எதிர்காலத்தில் டாக்டராகி சமூக சேவை விருப்பம் என தெரிவித்துள்ளார். இவரது தந்த‌ை மோகன் கிராம தபால் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் பாடவாரியாக பெற்ற மார்க்குகள் :தமிழ் -98 ; ஆங்கிலம் - 98; கணிதம் - 100 ; அறிவியல் -100; சமூக அறிவியல் - 100.


கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த சேலம் ஆத்தூர் விவசாயி சக்தினேல் மகள் , மாணவி சங்கீதா அளித்துள்ள பேட்டியில் ; முதலில் டாக்டராகி பின்னர் ஐ.ஏ.எஸ்., முடித்து கலெக்டராகி மக்கள் சேவை செய்வேன் என்றார்.



டி. வி., பார்க்க மாட்டேன் மாணவி பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பள்ளி மாணவி நித்யா அளித்த பேட்டியில் : இந்த வெற்றி தான் எதிர்பார்த்தது தான் என்றும். இதற்காக டி.வி., பார்ப்பதை தவிர்த்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், கரஸ்பாண்டன்ட் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். தனி வகுப்பு ஏதும் செல்லவில்லை , டாக்டராவதே விருப்பம் என்றார். இவரது தந்தை முருகேசன் வணிகவரி அலுவலகத்தில் உதவி அலுவலராக இருக்கிறார். தாயார் இல்லத்தரசி ஆவார்.
3 வது இடத்தை பிடித்த 24 பேர் விவரம் : 494 மார்க்குகள் பெற்று 24 மாணவ, மாணவிகள் , 3 வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு: 

01. நிம்ருதா, செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.

02. லட்சுமி பிரியா, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி, வடசேரி, நாகர்கோவில்

03. உமா, எஸ்.எச்.என். ஈதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலை பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

04. லலித் செல்லப்பா கார்பென்டர், பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

05. குங்குமாகல்யா, எஸ்.கே.பி. மேல்நிலை பள்ளி, உடுமலைபேட்டை, திருப்பூர்

06. இந்து, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, கவின்டாபாடி, கோபிசெட்டிபாளையம்.

07. ஹரிபிரபா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.

08. சோபனா, ஸ்ரீ குருகுலம் மேல்நிலை பள்ளி, மூலக்கால், கோபிசெட்டிபாளையம்.

09. அசோக்குமார், எஸ்.வி. வித்யாலயா மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.

10. லோகேஷ்குமார், ஜி.வி. மேல்நிலை பள்ளி, மசிலாபாளையம், சங்ககிரி.

11. விக்னேஷ்வரி, வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலை பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12. காவ்யா, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, கரிமங்கலம், தர்மபுரி.

13. செந்தில்குமார், சேரன் மேல்நிலைபள்ளி, பொன்னம்சத்திரம், கரூர்.

14. ஜெயபிரகாஷ், ஈ.ஆர். மேல்நிலைபள்ளி, திருச்சி.

15. ஜோதீஸ்வரன், ஆர்.சி. மேல்நிலைபள்ளி, திருச்சி.

16. காயத்ரி, அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி, பட்டுக்கோட்டை.

17. பவித்ரா தேவி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைபள்ளி, தஞ்சாவூர்.

18. அபிநயா, கலைமகள் மேல்நிலைபள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19. ஷைநி, மௌன்ட் பார்க் மேல்நிலைபள்ளி, தியாகதுர்க்கம், விழுப்புரம்.

20. சபானா பேகம், செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைபள்ளி, பல்லாவரம், செங்கல்பட்டு.

21. தனசேகர், டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைபள்ளி, திருவள்ளூர்.

22. சங்கீதா, செயின்ட் அந்தோனியர் பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை சென்ட்ரல்.

23.தாமோதரன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.

24. அய்யப்பன், பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலை பள்ளி, சென்னை கிழக்கு.

தமிழ் மொழிப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உத்தமபாளையம் இசட் கே எம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 491. தமிழ் மொழிப் பாடத்தில் 2ம் இடத்தை சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர் விக்னேஷ்குமார் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 477. 3வது இடத்தை 99 மார்க்குகள் பெற்று அருப்புக்கோட்டை ஜெயப்பிரியா பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 495.

மெட்ரிக்., பிரிவில் முதலிடத்தை பிடித்த 4 மாணவிகள் : மெட்ரிக் பாடபிரிவில் மாநில அளவில் 493 மார்க்குகள் எடுத்து முலிடத்தை பிடித்துள்ளனர். இவர்களது பெயர் விவரம் வருமாறு:


ஜெயபாரதி, கொங்குவேளாளர் மெட்ரிக்.., மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோயில், திருப்பூர். 

ஹரிஷினி ஸ்ரீ, பாரதி வி.பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் ஈரோடு. 

அனிதா, செந்தில் மெட்ரிக்., பள்ளி, தர்மபுரி.

அனிக்ஷா, ஷியான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு,