Monday, 16 May 2011

3வது முறையாக முதல்வராக இன்று ஜெ. பதவியேற்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக இன்று முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.

முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான தீர்மான முடிவை கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்தார். பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையனுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஜெயலலிதா.

அங்கு ஆளுநர் பர்னாலாவை சந்தித்து இக்கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டார்.

ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 12.15 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

3 வது முறையாக முதல்வராகிறார்:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 1991 முதல் 96 வரையிலும், பின்னர் 2001 முதல் 2006 வரையிலும் முதல்வராக பதவி வகித்துள்ளார் ஜெயலலிதா. தற்போது 2011ல் அவர் முதல்வராகிறார்.

அவர் முதல்வர் பதவிக்கு வரும் போதெல்லாம் அந்த ஆண்டில் ஒன்றாம் எண் இருப்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாகும்.



தலைவர்கள் வருகை:

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.



பொதுமக்களும் காணலாம்:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதைப் பொதுமக்களும் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான டிஜிட்டல் டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல பல்கலைக்கழகப் பகுதி மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் பெரிய சைஸ் டிஜிட்டல் டிவியும் வைக்கப்பட்டுள்ளது.

முதல் கையெழுத்து:

முதல்வர் பதவியை ஏற்றதும் புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்கிறார் ஜெயலலிதா. அங்கு முதல் கையெழுத்திடுகிறார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் விழாக் கோலம்:

3வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதையொட்டியும், அதிமுக அமைச்சரவை பதவியேற்கவுள்ளதையொட்டியும் சென்னை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளனர். அதிமுகவினர் சாரை சாரையாக சென்னைக்கு விரைந்துள்ளனர். கடற்கரையிலும் காலையிலேயே கூட்டம் திரண்டு வந்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment