Tuesday, 14 June 2011

4வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஆன்டிகுவா: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டிகளில் வென்ற இளம் இந்திய அணி, தொடரை(3-0) எளிதாக கைப்பற்றியது. நேற்று ஆன்டிகுவாவில் முக்கியத்துவமில்லாத நான்காவது போட்டி நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங் தேர்வு செய்தார்.

துவக்கம் மோசம்: வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் ஒரு முறை திணறல் துவக்கம் கண்டது. இஷாந்த் வேகத்தில் டான்சா ஹியாத்(1) காலியானார். பிரவீண் குமார் பந்தில் சர்வான்(1) அவுட்டானார். அப்போது 2 விக்கெட்டுக்கு வெறும் 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் டேரன் பிராவோ, லெண்டில் சிம்மன்ஸ் இணைந்து போராடினர். அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ், இஷாந்த் சர்மா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து அமித் மிஸ்ரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். மிஸ்ரா சுழலில் பிராவோ(15), மர்லான் சாமுவேல்ஸ்(8) சிக்கினர். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்தார். இவர் 67 ரன்களுக்கு ரன் அவுட்டாக, நிலைமை மோசமானது. இதற்கு பின் போலார்டு, கார்ல்டன் பாக் இணைந்து அணியை மீட்டனர். மனோஜ் திவாரி ஓவரில் போலார்டு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிஸ்ரா ஓவரிலும் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். அரை சதம் கடந்த போலார்டு(70), அஷ்வின் சுழலில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கார்ல்டன் பாக், ஆன்ட்ரூ ரசல் இணைந்து அதிரடி காட்டினர். இஷாந்த் ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, பாக் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. அமித் மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.

நழுவிய "ஹாட்ரிக்: பிரவீண் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கார்ல்டன் பாக்(39), ரசல்(25) அடுத்தடுத்து அவுட்டாகினர். இதை யடுத்து "ஹாட்ரிக் வாய்ப்பு காத்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி ஒரு ரன் எடுக்க, பிரவீண் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. டேரன் சமி(1), ரோச்(4) அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் சரிவு: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். டேரன் சமி வேகத்தில் மனோஜ் திவாரி(2), பார்த்திவ் படேல்(26) அவுட்டாகினர். ரசல் பந்தில் பத்ரிநாத்(12) வெளியேறினார். மார்ட்டின் வலையில் விராத் கோஹ்லி(22) சிக்கினார். தொடர்ந்து ரோகித் சர்மா 39 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி, 39 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து, 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருதை மார்டின் தட்டிச்சென்றார். தொடரின் 5வது மற்றும் இறுதிப்போட்டி 16ம் தேதி நடக்கிறது.

100வது போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று 100வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதன் மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா சமன் செய்தது. இந்திய அணி ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியுள்ளது.

கீமர் ரோச் காயம்: இஷாந்த் வீசிய போட்டியின் கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தது. 4வது பந்தை இவர் "பவுன்சராக வீச, அது கீமர் ரோச்சின் "ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதன் விளைவாக அவரது வாய் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* ஐந்தாவது பந்தில் ரோச் ஒரு ரன்னுக்காக ஓடினார். அப்போது இஷாந்த் "த்ரோ செய்ய "பெயில்ஸ் பறந்தது. இந்திய வீரர்கள் அரைகுறையாக "அப்பீல் செய்தனர். அம்பயர் மால்கமும், "டிவி அம்பயரிடம் கேட்கவில்லை. "ரீப்ளேயில் ரோச் ரன் அவுட்டானது தெளிவாக தெரிந்தது. இதனை "டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்த ஹர்பஜன் "அவுட் என அலறியும் பலன் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment