Saturday, 11 June 2011

"ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் மூன்றாவது மோதல்

ஆன்டிகுவா: ஆன்டிகுவாவில் இன்று நடக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த இரு போட்டியில் வென்ற இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், இந்திய அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில், இரு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இந்திய அணியில் சச்சின், தோனி போன்ற சீனியர்கள் இல்லாத குறையே தெரியவில்லை. இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். சிகர் தவான், பார்த்திவ் படேல் நல்ல துவக்கம் தருகின்றனர். "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, கேப்டன் ரெய்னா, பத்ரிநாத் மீண்டும் அசத்துவார்கள் என்று நம்பலாம். பின்வரிசையில் யூசுப் பதான், ஹர்பஜன் கைகொடுக்க வாய்ப்பு உள்ளது.
மிஸ்ரா அபாரம்:
வேகப்பந்து வீச்சில் பிரவீண் குமார், முனாப் படேல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவது மகிழ்ச்சி தான். சுழலில் ஹர்பஜன் சிங்குடன் சேர்த்து, அமித் மிஸ்ரா, யூசுப் பதானும் மிரட்டுகின்றனர். இன்று தங்களது அசத்தலை தொடரும் பட்சத்தில், இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை கைப்பற்றலாம்.
பிராவோ ஓய்வு:
 தொடர்ந்து இரண்டு தோல்விகளால் துவண்டு கிடக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் "மிடில் ஆர்டரில்' டுவைன் பிராவோவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது மேலும் சிக்கலைக் கொடுப்பது உறுதி. துவக்க வீரர் சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், சீனியர் சர்வான், சாமுவேல்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை தருவது உறுதி. கேப்டன் சமியும் பேட்டிங்கில் சற்று ஜொலிக்க முயற்சித்தால் நல்லது.
ரோச் வருகை:
பவுலிங்கை பொறுத்தவரையில் எதிர்வரும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு வருகிறது. இதனால் முதல் இரண்டு போட்டியில் இடம் பெறாத கீமர் ரோச், ஆன்ட்ரூ ரசல் இன்று அணிக்கு திரும்புகின்றனர். ராம்பால் நீக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆன்டிகுவா ஆடுகளத்தில், பேட்ஸ்மேன்கள் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கின்றனர். இந்நிலையில் பவுலர்கள் மாற்றம் எந்தளவுக்கு பலன் தரும் என்பது இன்று தான் தெரியும்.
வெற்றி யாருக்கு?
முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, இன்று வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்று வென்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இதனால் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
----
சோதனை "களம்'
இன்று போட்டி நடக்கும் ஆன்டிகுவா மைதானம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எப்போதும் சோதனையாகவே அமைந்துள்ளது. இங்கு 2009ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி, 10 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில், மோசமான ஆடுகளம் காரணமாக ரத்துசெய்யப்பட்டது.
* தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு பங்கேற்ற 4 ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் என, அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.
--
மழை வாய்ப்பு
ஆன்டிகுவாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்த பட்சம் 21 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டமாக காணப்படும். இருப்பினும் மழை வரும் வாய்ப்பு இல்லை.
--
தொடர்கிறது கெய்ல் புறக்கணிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான அணியில், கெய்ல் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது போட்டிக்கான அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment