ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, ராம்பால் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ரசல், கீமர் ரோச்சுடன் அறிமுக வீரராக டான்ஜா சேர்க்கப்பட்டார். "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, பீல்டிங் தேர்வு செய்தார்.
மிஸ்ரா அபாரம்:வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் எட்வர்ட்ஸ், "டக் அவுட்டானார். சர்வான் 28 ரன்கள் எடுத்தார். இதன் பின் அமித் மிஸ்ரா சுழலில் அசத்த துவங்கினார். இவரது சுழலில் சிக்கி, சாமுவேல்ஸ், டான்ஜா தலா ஒரு ரன்னுடன் திரும்பினர். சிம்மன்ஸ் (45) அரைசத வாய்ப்பை இழந்தார்.
அதிரடி போலார்டு (6), கேப்டன் சமி (3) நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 96 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.
ரசல் அசத்தல்:இந்நிலையில் ஜோடி சேர்ந்த பக், ஆன்ட்ரூ ரசல் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரசல் அதிரடியில் ஈடுபட்டார். பிரவீண் குமார் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய இவர், யூசுப் பதானின் பந்தில் அடுத்தடுத்து சிக்சர் அடித்தார். இந்நிலையில், பக் (36) அவுட்டானார். மறுமுனையில் ரசல், தனது முதல் சர்வதேச அரைசதம் கடந்தார். இவர் ரெய்னாவின் ஓவரில், 2 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 22 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு, 225 ரன்கள் எடுத்தது. ரசல் 92 (64 பந்துகள்), ரோச் 7 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா, முனாப் படேல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சுமாரான துவக்கம்:எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, பார்த்திவ் படேல், சிகர் தவான் இணைந்து சுமாரான துவக்கம் கொடுத்தனர். சிகர் தவான் (4) ஏமாற்றினார். அம்பயரின் தவறான தீர்ப்பினால், விராத் கோஹ்லி "டக் அவுட்டானார். பத்ரிநாத் (11) ரன் அவுட்டானார். பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த பார்த்திவ் படேல் (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். கேப்டன் ரெய்னா (3) பொறுப்பற்ற முறையில் திரும்பினார். யூசுப் பதானும் (1) அணியை கைவிட்டார்.
ரோகித் சர்மா அபாரம்: இதன் பின்னர் ரோகித் சர்மாவும், ஹர்பஜன் சிங்கும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இந்த ஜோடி 7வது விக்கெட் இழப்பிற்க 88 ரன்கள் குவித்தனர். ஹர்பஜன் சிங் 64 பந்துகளில் 41 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் பிரவீண் குமார் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்திய அணி 46.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 91 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். பிரவீண் குமார் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் சமி, பிஸ்போ ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியது.

No comments:
Post a Comment