Friday, 13 May 2011

தமிழக தேர்தல்: அதிமுக மாபெரும் வெற்றி


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் அக்கூட்டணி 204 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
திமுக கூட்டணி 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலையில், அதிமுக தனியாகவே சுமர் 151 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
தனியாக ஆட்சி அமைக்க 117 தொகுதிகள் மட்டுமே தேவை என்பதால், அதிமுக தனியாக ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
ஜெ. வாக்காளருக்கு நன்றி
முன்னிலை நிலவரம்
அதிமுக 151
தேமுதிக 29
திமுக 22
சி.பி.எம். 10
சி.பி.ஐ. 9

தமிழகத் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாக்காளர்களுக்கு அதிமுக தலைவர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடுத்த 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை தரப்போவதாகக் கூறிய அவர், திமுக ஆட்சி தமிழகத்தின் நிதி நிலையை மிக மோசமான சூழலில் விட்டுச் சென்றிருப்பதாகவும் கூறினார்.
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தனது முதல் நோக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இடதுசாரிகளுடனான கூட்டணி தேசிய அளவில் தொடருமா என்ற கேட்டபோது தொடரும் என்று நம்புகிறேன் என்று அவர் பதிலளித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியவுடன், சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
கருணாநிதி ராஜினாமா
தேர்தல தோல்வியை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை காபந்து முதல்வராக இருக்குமாறு ஆளுநர் கருணாநிதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, மைதீன்கான், வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு உள்பட பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனும் தோற்றுள்ளார்.
அதே நேரத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி, திருவாரூர் தொகுதியிலும், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் வென்றுள்ளனர். அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் பின்தங்கியிருக்கிறார்.
தேமுதிக
அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக நல்ல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 40 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 29 இடங்களை வெல்லும் நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment